திடீர் சாலை மறியல்; பொதுமக்கள் அவதி

சங்ககிரியில் திடீரென நடந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2024-01-08 09:03 GMT

சங்ககிரியில் திடீரென நடந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல் புதூர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதி மக்கள் எடப்பாடிலிருந்து குமாரபாளையம் செல்லும் பிரதான சாலையிலிருந்து வட்டக்காடு பகுதிக்கு செல்லக்கூடிய கிராமப்புற சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளைக் கடந்தும் தற்போது வரை குண்டும் குழியுமாக உள்ளதாகவும் இதில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று திடீரென மேல்புதூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குமாரபாளையத்தில் இருந்து எடப்பாடி செல்லும் பிரதான சாலையில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தேவூர் போலீசார் சாலை மறியல் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடனடியாக விரைந்து வந்து சாக்கடை கால்வாயுடன் கூடிய தார் சாலை அமைக்க அதிக செலவினங்கள் ஆகும் என்பதால் தற்காலிகமாக தார் சாலை அமைத்து கொடுப்பதாக உறுதி அளித்தனர். இருப்பினும் மூன்று மாதத்திற்குள் சாக்கடை கால்வாய் அமைக்க தீர்மானம் நிறைவேற்றி சாக்கடை கால்வாய் அமைத்துக் கொடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கிராம மக்கள் சாலை மறியலில் போராட்டத்தை கைவிட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News