கோடை வெயில் தாக்கம்; பீர் விற்பனை அதிகரிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுக்கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் எதிரொலியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு இன்றி கிடைப்பதால் மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. மேலும் வெப்பக் காற்றும் வீசுகிறது. காலை முதல் மாலை வரை ஒரே அளவாகத் தான் வெயிலின் தாக்கம் இருக்கிறது.
வெயில் சுட்டெரித்து வருவதால், வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க மக்கள் இளநீர், பழச்சாறு, கரும்புச்சாறு, குளிர்பானங்களை தேடி சென்று ருசித்து வருகின்றனர். இதில் மதுபிரியர்கள் ரம், பிராந்தி போன்ற மதுவகைகளுக்கு மாற்றாக வெயிலின் தாக்கத்தை தணிக்க பீர் வகைகளை அதிகமாக நாடிச் செல்கின்றனர். இதனால் அனைத்து கடைகளிலும் பீர் வகைகளை விரும்பி மதுபிரியர்கள் குடிக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 155 டாஸ்மாக் கடைகளிலும் பீர் விற்பனை படுஜோராக நடக்கிறது. குறிப்பிட்ட வகை பீர்களை மட்டும் அதிகம் பேர் நாடி செல்கின்றனர். இதனால் அந்த வகை பீர்கள் விரைவாக டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகின்றன.
இருந்தாலும் வேறு வகை பீர்கள் இருப்பதால் தட்டுப்பாடு இன்றி பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கத்தை விட பீர் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் ஜில் பீர் தான் கிடைப்பது இல்லை. இருந்தாலும் தட்டுப்பாடு இன்றி பீர் கிடைப்பதால் மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அதேவேளையில், சுட்டெரிக்கும் வெயிலில் வெப்பத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க மதுவகைகளை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.