கோடை உழவு: வேளாண் துறை விளக்கம் 

கோடை உழவின் அவசியம் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.

Update: 2024-04-08 14:36 GMT

கோடை உழவின் அவசியம் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.


நிலத்தில் கோடை உழவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.  இது குறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு)   ஏ.அப்சரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: "கோடை உழவு என்பது  வெப்பமான கோடையில் ,    ஆழமாக உழுது மண்ணை  கிருமி நீக்கம் செய்தல் ஆகும். கோடை உழவு செய்வதால் கடினமான மேலடுக்கு உடைந்து   மண்ணின் ஊடுருவல் திறன்  அதிகரித்து மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. இதன் விளைவாக தாவர வேர்கள்  எளிதாக அதிக ஈரப்பதத்தை பெறுகிறது.  மேலும் மண்ணின் கட்டமைப்பு,  காற்றோட்டத்தை மேம்படுத்துகிறது. இது நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கு உதவுகிறது.  இதன் விளைவாக தாவரங்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் அதிகரித்த காற்றோட்டம் களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் முந்தைய பயிர்களின் வேர்கள் மற்றும் களைகள்  போன்றவை மூலம் வெளிப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சிதைவதற்கு உதவுகிறது. மழை நீரை உறிஞ்சும் திறன் அதிகரிக்கிறது.  

பல பூச்சிகள் வெப்பமான கோடை காலத்தில் மண்ணின் அடியில் உறங்கும். கோடை உழவு செய்யும்போது மண்ணை கவிழ்ப்பதால் சூரியனின் கூர்மையான கதிர்கள் மண்ணில் நுழைந்து மண்ணில் பரவும் பூச்சிகள்,  முட்டைகள், புழுக்கள், கூட்டுப் புழுக்கள் மற்றும் நோய் உண்டாக்கும் கிருமிகளை கொன்று விடும்.  இதனால் அடுத்தடுத்த பயிர்களில் பூச்சிகளின் ஆபத்துகள் குறைகிறது. இதன் விளைவாக பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு மற்றும் பூச்சிக்கொல்லிகளை வாங்குவதில் விவசாயிகளின் செலவு குறைகிறது. களைச்செடிகளை கட்டுப்படுத்த உதவுகிறது.  எனவே, பட்டுக்கோட்டை வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்து அடுத்தடுத்த பருவங்களில் பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகளின் பாதிப்புகளில் இருந்து பயிரை காத்து அதிக மகசூல் பெற்றிட வேண்டும்" பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News