நீலகிரியில் ஆ.ராசாவை ஆதரித்து ஊட்டியில் உதயநிதி பிரச்சாரம்
இந்தியாவிற்கு நல்ல பிரதமர் வேண்டுமென்றால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும், ஊட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதி தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் ஆ.ராசாவை ஆதரித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஊட்டி ஏ.டி.சி., சந்திப்பில் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது,
வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு அன்று அனைவரும் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று உங்களிடம் கேட்க வந்தேன். உங்களிடம் உள்ள எழுச்சியை பார்க்கும்போது நீங்கள் ஏற்கனவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டீர்கள்.
வெற்றி உறுதியாக இருப்பது தெரிகிறது. 2019 தேர்தலில் வேட்பாளர் ஆ.ராசாவை 2 லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை அதைவிட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கடந்த முறை எதிரணியினர் ஓரணியாக வந்தனர்.
இந்த முறை பிரிந்து நாடகமாடி வருகின்றனர். எதிர்தரப்பு வேட்பாளர்கள் டெபாசிட் இழக்கும் அளவிற்கு தேர்தல் பிரசாரம் வியூகம் இருக்க வேண்டும். துணை பொது செயலாளர் ஆ.ராசாவிற்கு வாக்கு கேட்க நான் வந்திருப்பது எனக்கு பெருமையாகும். பெரியாரின் கொள்கை வடிவம், அண்ணாவின் அறிவு வடிவம், கருணாநிதியின் சுயமரியாதை வடிவம், ஸ்டாலினுக்கு தளபதி, எனக்கு அரசியல் வழிகாட்டியாக ஆ.ராசா விளங்குகிறார். பொய்யாக புனையப்பட்ட 2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் வரை தனி ஆளாக நின்று போராடி, அனைத்து சூழ்ச்சிகளையும் வீழ்த்தினார்.
நீலகிரி மாவட்டத்தில் ரூ.4000 கோடி மதிப்பில் சீகூர் நீரேற்று புனல் மின் திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். ரூ.3000 கோடி மதிப்பில் குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் நடைபெற்று வருகிறது.
ரூ.450 கோடியில் மருத்துவக் கல்லூரி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. குன்னூரில் ரூ. 50 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.43 கோடியில் கோத்தகிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 31 கோடி மதிப்பில் கூடலூர் அரசு மருத்துவமனை புனரமைக்கப்பட்டது. ரூ.36 கோடியில் இரண்டு கட்டங்களாக ஊட்டி மார்க்கெட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஊட்டி 200-வது ஆண்டு விழாவிற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது.
10 வருடங்களுக்கு முன்பு ரூ. 450க்கு விற்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.1200 ஆக உயர்ந்துவிட்டது. ஆனால் தற்போது ரூ.100 மட்டும் விலை குறைக்கப்படும் என்று அறிவித்து நாடகமாடுகிறார் பிரதமர் மோடி. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கும், பெட்ரோல் ரூ.75-க்கும் கொடுக்கப்படும். டீசல் விலை அதிகரிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் டீசல் ரூ.65-க்கும் தரப்படும். இதேபோல் நீலகிரியில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விளையாக கிலோவுக்கு ரூ.35 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பாதைகள் இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் மேம்படுத்தப்படும். மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு ஆகிய வழித்தடங்களை உள்ளடக்கிய அகல ரெயில் பாதை திட்டம் கொண்டுவரப்படும். ரூ.5 கோடியில் நடந்து வரும் கூடலூர் பஸ் நிலைய பணிகள் விரைவில் முடிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு வராத மோடி, நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்து தமிழகத்திற்கு அடிக்கடி வருகிறார். தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் மீட்பு பணிகளை விரைவு படுத்தினார்.
பிரதமர் மோடியோ, அ.தி.மு.க., வினரோ அப்போது வரவில்லை. மத்திய அரசு இழப்பீடுத் தொகையும் கொடுக்கவில்லை. மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2000 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் மொழி உரிமை, நிதி உரிமை, கல்வி உரிமை என அனைத்து உரிமைகளையும் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசிடம் அடகு வைக்கப்பட்டு விட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு இந்தியாவில் வாய்ப்பு இல்லை. பொது சிவில் சட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர முடியாது. இஸ்லாமியர்கள் பாதிக்கப்படக் கூடிய சி.ஏ.ஏ., சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. அனிதா முதல் ஜெகதீசன் வரை இதுவரை 22 பேர் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துள்ளனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை அவர் இறந்த பின்னர் தான் நீட் தேர்வு வந்துள்ளது. அடிமைகள் நீட் தேர்வு கொண்டு வந்து நமது கல்வி உரிமையை பறித்துள்ளனர்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும். தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3, ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 என விலை குறைப்பு செய்யப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயணத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 465 கோடி முறை பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் மற்றும் ஒரு கோடி முறை பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் மாதம் ரூ. 900 சேமிக்கப்படுகிறது. பெண்கள் மேற்படிப்பு முடித்து பொருளாதார நிலையில் உயர்வதற்காக புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்தார். 100 வருடங்களுக்கு முன்னால் பெண்கள் மேல் ஆடை அணிய உரிமை கிடையாது,
படிக்க உரிமை கிடையாது. எனவே பெண்களின் உரிமைக்காக பெரியார் போராடினார். அவர் வழியில் வந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என்று சட்டம் இயற்றினார். தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் இதுவரை 3 லட்சம் மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அரசு பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு நாளும் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் 5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. தற்போது தெலுங்கானா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. காலை உணவு திட்டம் மிக சிறந்த திட்டம் என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்து அந்த நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசு. நீலகிரி மாவட்டத்தில் மற்றும் 12 ஆயிரம் மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.
இந்தத் திட்டத்தால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு 1 கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையை வழங்கப்படுகிறது. நீலகிரியில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயன் அடைந்து வருகின்றனர். இதில் ஒரு சில குறைகள் உள்ளது. எனவே தேர்தல் முடிந்த அடுத்த 6 மாதங்களில் தகுதி உள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். மத்திய அரசு நிதியில் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் ஒரு செங்கல் மட்டுமே நடப்பட்டுள்ளது.
ஆனால் நிதி கொடுக்கவே இல்லை. எனவே அந்த ஒரு செங்களையும் நான் எடுத்து வந்து விட்டேன். இதனால் என் மீது வழக்கு தொடுத்தால் கூட பரவாயில்லை. மருத்துவமனை கட்டும் வரை கல்லை தரமாட்டேன். பா.ஜ.க., ஆளுகின்ற 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் ஆனால் தமிழகத்திற்கு மட்டும் நிதி ஒதுக்கவில்லை. எனவே இந்தியாவிற்கு நல்ல பிரதமர் வேண்டும் என்றால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். .... கூட்டத்தில் தனக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை என்று ஒரு பெண் குற்றச்சாட்டு தெரிவித்தார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரியாக கட்டினால் 29 காசு தான் நமக்கு திருப்பி தரப்படுகிறது.
ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க., ஆளும் உத்தர பிரதேசத்தில் ஒரு ரூபாய் வரியாக கட்டினால் மூன்று ரூபாய் தரப்படுகிறது. அதேபோல் பா.ஜ.க., கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் தலைமையிலான பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் வரியாக கட்டினால் ஏழு ரூபாய் தரப்படுகிறது. எனவே தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும், நல்ல பிரதமர் வேண்டும் என்றால் இந்தியா கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
வெறும் 29 பைசாவிலே தமிழகத்திற்கு இவ்வளவு நலத்திட்டங்கள் செய்யப்படுவதால், தமிழக மக்களை மதிக்கக் கூடிய வேறொரு பிரதமர் வந்தால் நிச்சயம் சரியான நிதியை வாங்குவார் அதன் மூலம் விண்ணப்பித்து பணம் கிடைக்காத மகளிர்க்கும் உதவித்தொகை வழங்கப்படும்,"என்றார்.