குள்ள பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

அரசு மருத்துவமனையில் குள்ள பெண்ணிற்கு பிறந்த ஆண் குழந்தை - மருத்துவர்கள் சாதனை.

Update: 2024-03-15 10:29 GMT

மருத்துவர்கள் சாதனை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதன் முதலாக குள்ளப்பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. திருப்புவனம் அரசு மருத்துவமனையை நம்பி சுற்றுவட்டாரத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயன்பெறுகின்றனர். தினசரி 500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மாவட்டத்திலேயே திருப்புவனம் அரசு மருத்துவமனையில்தான் அதிகளவு பிரசவங்கள் நடைபெறுகின்றன.

கடந்தாண்டு 575 பெண்களுக்கு பிரசவங்கள் நடந்து குழந்தைகள் பிறந்துள்ளன. சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். திருப்புவனம் அருகே கீழராங்கியத்தைச் சேர்ந்த முத்துவேல் மனைவி வாணீஸ்வரிக்கு (22) கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் கர்ப்பமானார். இவரது கணவர் கொத்தனாராக பணிபுரிகிறார். கூலி வேலை பார்த்து வரும் இவர்கள் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் கர்ப்பம் தரித்தது முதல், தொடர் பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார்.

சாதாரணமாக 150 செ.மீ உயரத்திற்கு மேல் உள்ள பெண்களுக்கு இடுப்பு எலும்பு அகலமாக இருப்பதால் சுகப்பிரசவம் நடைபெறும், மிக சிக்கலான பெண்களுக்கு மட்டும் அறுவை சிகிச்சை செய்யப்படும், வாணீஸ்வரி பிறப்பிலேயே குள்ளம் என்பதாலும் 124 செ.மீ அளவு உயரம் இருப்பதாலும் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்து திருப்புவனம் அரசு மருத்துவமனையில் டாக்டர் ஸ்ரீவித்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் வெற்றி கரமாக அறுவை சிகிச்சை செய்து ஆண்குழந்தையை வெளியே எடுத்தனர். வழக்கமான உயரமுள்ள பெண்களுக்கு எடை குறைவாக குழந்தை பிறக்கும் நிலையில் குள்ள பெண்ணிற்கு இரண்டரை கிலோ எடையில் ஆண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். உறவினர்கள் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தனர்

Tags:    

Similar News