மதுரையில் சிபிஎம் சார்பில் மீண்டும் களமிறங்கும் சு.வெங்கடேசன்
மதுரை மக்களவைத் தொகுதியில் மீண்டும் திமுக கூட்டணி சார்பில் சிபிஐ (எம்) வேட்பாளராக சு. வெங்கடேசன் போட்டியிடுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும், சாகித்ய அகாதெமி விருது பெற்றவரும், தற்போதைய மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் (வயது 54) மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த 34 ஆண்டுகளாக கட்சி உறுப்பினராகவும், 33 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், மாநில தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது சங்கத்தின் மதிப்புறு தலைவராக பணியற்றி வருகிறார்.
2011ம் ஆண்டு எழுதிய முதல் நாவலான “காவல் கோட்டம்” நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், கலாச்சாரத்தின் அரசியல், ஆட்சி தமிழ் - ஒரு வரலாற்றுப் பார்வை, வைகை நதி நாகரீகம், சமயம் கடந்த தமிழ், கதைகளின் கதை, உட்பட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனந்த விகடன் வார இதழில் 119 வாரம் வெளியான “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அரவான் திரைப்படத்தில் கதாசிரியர் ஆவார்.
தமிழரின் தொல்நாகரீகத்தின் சான்றான கீழடி அகழாய்வினை உலகறியச் செய்வதில் முதன்மை பங்கு வகித்தவர். தமிழ் செம்மொழி தகுதி பெற பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை செய்தவர். தமிழ்மொழி தொடர்பான தேசிய, சர்வதேசிய கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். கட்சி நடத்திய பல்வேறு மக்கள் போராட்டங்களிலும், இயக்கங்களிலும் முக்கிய பங்கு வகிப்பவர்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 5 ஆண்டு காலம் மதுரை மாவட்ட மக்களின் நலன்களுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழ் மொழி உரிமைக்காகவும் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பியவர். தாம் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளில் வெற்றி கண்டவர்.மொழித் திணிப்பு எதிர்ப்பு, தாய்மொழி உரிமை, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பு, இந்தியாவிலேயே போட்டித்தேர்வு மாணவர்களுக்கான தனித்த பூங்கா அமைத்தது, ரயில்வே சார்ந்த கோரிக்கைகள், கோவிட் பேரிடர் காலத்தில் அன்னவாசல் உள்ளிட்ட முன்னுதாரணமான பணிகள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் நைபர் ஆராய்ச்சி மையத்திற்கு தொடர் போராட்டம், மதுரை விமான நிலைய விரிவாக்கம், ரயில் போக்குவரத்து, மதுரை மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், மதுரை தொழில் வளர்ச்சிக்கான தலையீடுகள், ரூ. 500 கோடி அளவில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்விக் கடன் பெற்றுத்தந்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு முகாம்கள் நடத்தி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவி செய்தது, ஐ.ஐ.டி. நிறுவனம் உள்ளிட்டு சமூக நீதிக்காக குரல் எழுப்பியது என ஒவ்வொரு துறையிலும் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் விடாப்பிடியான போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பவர்.
கல்வி, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டு மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் அயராது பணியற்றி தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தவர். தமிழகம் மட்டுமல்ல, உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களை பெற்று வருபவர். மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சார்ந்தவர். மனைவி பி.ஆர். கமலா. இவர்களுக்கு யாழினி, தமிழினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.