தமிழ் பல்கலைக்கழகம் - அரசு மகளிர் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் 

Update: 2023-12-17 02:45 GMT
தமிழ் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தம்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியின், எட்டு துறைகளுடன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக 5 துறைகள் இணைந்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். தமிழ்த்துறையுடன் இலக்கியத்துறைத் தலைவர் ஜெ.தேவி, ஆங்கிலத்துறையுடன் மொழிபெயர்ப்புத்துறைத் தலைவர் இரா.சு.முருகன், வரலாற்றுத் துறையுடன் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைத் தலைவர் ஆ.துளசேந்திரன், கணினியியல் துறையுடன் கணிப்பொறி துறைத்தலைவர்  அ.செந்தில்குமார், இயற்பியல், வேதியியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் துறையுடன் சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத்தலைவர் கு.க.கவிதா ஆகியோர் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.இந்நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் சி.தியாகராசன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பெ.இளையாப்பிள்ளை வாழ்த்திப் பேசினர். 

பல்கலைக்கழக துணைவேந்தர் சி.திருவள்ளுவன் தலைமை வகித்து பேசுகையில், ‘‘இரு நிறுவனங்களும், கருத்தரங்கு சார் பரிமாற்றங்கள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மாணவர்-ஆசிரியர் ஆராய்ச்சி ஒருங்கிணைந்து ஆய்வு செய்து கொள்வது தொடர்பாக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐந்து வருடங்கள் (2023-2028) செய்து கொள்ளப்படுகிறது.  வரையறுக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட ஐந்து துறைகளுடன் ஆய்வுக் கலங்களில் கீழ்க்காணும் பொதுத் தன்மையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்குவது என ஒருமனதாக தீர்மானம் பெற்று ஒப்பந்தம் உருவாக்கப்பெறுகிறது. 

இரு கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மொழி பெயர்ப்புத் திறன் மற்றும் இலக்கிய அறிவை மேம்படுத்தும் விதமாக கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்துதல், சிறப்புச் சொற்பொழிவுகள், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகள் போன்றவற்றை நடத்துதல், ஆய்வுக் கட்டரைகள், மொழிபெயர்ப்பு நூல்கள், குறுந்தகடுகள் மற்றும் குறும்படங்கள் முதலான வெளியீடுகளை இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து வெளியிடுதல். மேலும் இரு துறை ஆசிரியர்களும் இணைந்து செயல்படுவதன் மூலம் ஆசிரியர்களின் பணி, கல்வி, ஆய்வு முதலிய கூறுகளின் புரிதல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் தங்கள் திறன்களை மேம்படுத்தி கொள்வதோடு மாணவர்களின் அறிவுத் திறனையும், புரிதலையும் மிகுபடுத்திக் கொள்ளமுடியும். இதன்மூலம் மொழி பெயர்ப்புத் திறனாய்வு குறித்து புதிய விளக்கமும், வளர்ச்சியும் மேன்மையும் பெறமுடியும்” எனத் தெரிவித்தார். நிகழ்வின் நிறைவில், புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் சுகந்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News