வரிநிலுவைத் தொகை: வேண்டுகோள் விடுத்த பொன்னேரி நகராட்சி ஆணையா்
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் பொதுமக்கள் வரி நிலுவைத் தொகையினை செலுத்தி ஒத்துழைப்பு தரவேண்டும் என நகராட்சி ஆணையா் வேண்டுகொள்விடுத்துள்ளார்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.. இங்குள்ள 29வாா்டுகளில் 237 தெருக்களும், 9,725 குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளன. பொன்னேரி நகராட்சியில் வசிப்போரிடம் வசூலிக்கும் நிதி ஆதாரத்தை கொண்டு குடிநீா், சாலை, மின் வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
நகராட்சியில் காலிமனை, சொத்து வீட்டு வரி, தொழில் வரி மூலம் ரூ. 2. 93 கோடி வசூலிக்க வேண்டும். மேலும் நிலுவை தொகை ரூ.1.52 கோடி உள்ளது. நகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பல்வேறு குழுக்களாக பிரிந்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சென்று வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
அத்துடன் நகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் வரி செலுத்தும் வகையில் கணினி மையம் அமைக்கப்பட்டுள்ளது.. இது குறித்து பொன்னேரி நகராட்சி ஆணையா் எஸ்.கோபிநாத், கூறுகையில் வீடு தேடி வரும் நகராட்சி ஊழியா்களிடம் நிலுவைத் தொகை உள்ளிட்ட வரிபாக்கியினை செலுத்தி, ஜப்தி குடிநீா் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கையை தவிா்க்க வேண்டும். நகராட்சியில் தொடா்ந்து அடிப்படை பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் வரி நிலுவைத் தொகையினை செலுத்தி ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.