வரிவசூல் சிறப்பு முகாம்கள்
சேலம் மாநகராட்சியில் நாளை 8 வார்டுகளில் வரிவசூல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
Update: 2024-04-27 03:05 GMT
சேலம் மாநகராட்சியில் நாளை 8 வார்டுகளில் வரிவசூல் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது 2024-2025-ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தினால் அவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். எனவே, நடப்பு 2024-2025-ம் நிதியாண்டிற்கான மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் முதலியவற்றை செலுத்த ஏதுவாக பொதுமக்கள் வசதிக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெற உள்ளன. சூரமங்கலம் மண்டலம் 3-வது வார்டில் குரங்குச்சாவடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 25-வது வார்டில் பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை சொசைட்டியிலும், அஸ்தம்பட்டி மண்டலம் 17-வது வார்டில் அழகாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்திலும், 29-வது வார்டு வெங்கடப்ப செட்டி சாலையில் உள்ள அம்மா உணவக வளாகத்திலும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறுகிறது. அம்மாப்பேட்டை மண்டலம் 35-வது வார்டில் ஆதி செல்வன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், 37-வது வார்டில் காமராஜர் நகர் தொடக்கப்பள்ளியிலும், கொண்டலாம்பட்டி மண்டலம் 59-வது வார்டில் பெருமாள் கோவில் மேடு அருகே காளியம்மன், மாரியம்மன் கோவில் மண்டபத்திலும், 60-வது வார்டில் கோவிந்தம்மாள் நகர் கிருத்திகா அப்பார்ட்மெண்ட் என மொத்தம் 8 வார்டுகளில் வரிவசூல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.