ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் !
ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானத்தில் நடந்தது.
தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 2009-க்கு பின்பு முதுநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கோட்டை பகுதியில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் மாவட்ட கவுரவ தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கலைவாணன், மாவட்ட செயலாளர் அன்பரசு, மாவட்ட தலைவர் மனோகரன் உள்பட முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன் நடத்தப்பட வேண்டும்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைக்கும் அனைத்து உரிமைகளும், சலுகைகளும், நலத்திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.