கொலை வழக்கில் திறம்பட பணியாற்றிய துணைகாவல் கண்காணிப்பாளர் குழுவினர்
திருவிடைமருதூர் துணைகாவல் கண்காணிப்பாளர் ஜாபர்சித்திக் குழுவினர் கொலை வழக்கில் திறம்பட பணியாற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட நெய்குன்னம் கிராமத்தில் 12.05.2024 இரவு நல்லதம்பி மகன் கலைவாணன் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். மேற்படி கொலை சம்பவத்தை தொடர்ந்து நெய்குன்னம் கிராமத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வண்ணம் இவ்வழக்கில் கொலையான கலைவாணன் குடும்பத்துடன் சிவில் பிரச்சனை உள்ள நபர்களின் வீடுகளில் இருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
கொலை சம்பவ விபரம் தெரிய வந்தததை தொடர்ந்து காவல் துறையினர் சம்பவஇடத்திற்கு சென்று அசம்பாவிதம் ஏற்படாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேற்படி கொலை வழக்கில் இறந்து போன நபரின் தம்பி உதய சூரியன் கொடுத்த புகாரின் பேரில் குற்ற எண்:227 சட்டபிரிவு 302 இ.த.ச கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் திருவிடைமருதூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படை உதவியுடன் 58 சந்தேக நபர்களின் CDR ஆய்வு செய்யப்பட்டும், 18 இடங்களில் CCTV Camera பதிவுகளை ஆய்வு செய்தும் மற்றும் பல்வேறு சாட்சியங்களை நேரடியாக விசாரித்தும் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி விசாராணையில் கொலையான நபரின் வீட்டிற்கு அருகே இருந்த CCTV கேமரா கொலைச் சம்பவத்திற்கு முன்பு திட்டமிட்டே அணைத்து வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.இறந்து போன நபரின் உறவினர் அருண்பாண்டியன் செயல்பாடுகள், குறிப்பாக சந்தேக நபர்களின் வீடுகளில் இருந்த வாகனங்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட செயல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து மேற்படி நபரின் செல்போன் CDR ஆய்வின் அடிப்படையில் CCTV Camera பதிவுகளை ஆய்வு செய்ததில் கொலை சம்பவத்தன்று சம்பவத்திற்கு முன்பாக கும்பகோணத்தில் உள்ள ஒரு கடையில் கறி வெட்டும் அரிவாள் ஒன்றை அருண் பாண்டியன் வாங்கியது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கொலையான நபருக்கும் அருண்பாண்டியன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள பிரச்சினை என பல்வேறு விபரங்கள் பற்றி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலிசார் தன்னை ஆதாரத்துடன் நெருங்கி வருவதை தெரிந்து கொண்ட அருண்பாண்டியன் நேற்று 18.05.2024 குலசேகர நல்லூர் கிராம நிர்வாக அலுவலரிடம் ஆஜராகி பணம் கொடுக்கல் வாங்கலில் உள்ள பிரச்சினை மற்றும் தங்கை காதல் திருமணம் செய்து கொண்டதை பற்றி இறந்து போன நபர் அவதூறாக பேசியதால் ஏற்பட்ட தகராறு ஆகிய முன்விரோதங்களால் திட்டமிட்டு அருண் பாண்டியனை கொலை செய்ததையும் மற்றும் சம்பவ தினத்தன்று கொலையான நபரின் நாய்குட்டிகளை நல்ல விலைக்கு வாங்குவற்கு Advance கொடுப்பதற்கு ஆட்கள் வந்துள்ளார்கள் என்று கொலையான நபரை சம்பவ இடத்திற்கு வர சொல்லி அரிவாளால் வெட்டி கொலை செய்ததை தெரிவித்தும், கொலையானவரின் செல்போனை ஆஜர் செய்தும் வாக்கு மூலம் கொடுத்ததை தொடர்ந்து அருண்பாண்டியனை பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் திரு.முத்துகிருஷ்ணராஜா கைது செய்தும், எதிரியிடமிருந்து அரிவாள்,கொலையானவரின் செல்போன் மற்றும் இதர தடய பொருட்கள் கைப்பற்றப்பட்டு எதிரியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இன்று 19.05.2024 பாளையங்கோட்டை மத்திய சிறையில் நீதிமன்றக்காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வழக்கில் தடய அறிவியல் தொழில் நுட்பம் முதலான பல்வேறு அறிவியல் தொழில் நுட்பத்துடன் இவ்வழக்கின் புலன் விசாரணையை திறம்பட மேற்கொண்டு கண்டறிந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். சமீபகாலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களில் கஞ்சா போதையுடன் குற்ற சம்பவங்கள் நிகழ்வதாக மிகைப்படுத்தி சிலர் உள்நோக்கத்துடன் பொதுமக்களுக்கு தவறான தகவல்களை பரப்பி வருவது வாடிக்கையாக உள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவ்வழக்கிலும் அவ்வாறே கொலையாளிகள் குற்றச் செயலை செய்ததாக சிலர் சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தனர்.போதைப் பொருள் சம்பந்தமான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் போதை பொருளால் ஏற்படும் தீய விளைவுகள் பற்றிஅவ்வப்போது பல்வேறு விழிப்புணர்வு நிகழச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.போதைப் பொருள் சம்மபந்தமான குற்றச் செயல்கள் குறித்து புகார்களை தெரிவிக்க ஏற்கனவே 8300518020 தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனவே உண்மைக்கு புறம்பாக வரும் தகவல்களை பொதுமக்கள் யாருக்கும் பகிர வேண்டாம் என்று தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.