தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகள் கடன் தர மறுக்கும் போக்கு : கோட்டாட்சியரிடம் புகார்
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
Update: 2024-02-22 16:12 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுகோட்டை, பேராவூரணி வட்டத்திற்குட்பட்ட, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சமூகப் பாதுகாப்புத் திட்டம் தனி வட்டாட்சியர் பாஸ்கர், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், தலைமை நில அளவையர் செந்தில்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் ஏ.மேனகா அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, "பட்டுக்கோட்டை, பேராவூரணி பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான தனி கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெண்டாம்புளிக்காடு ஊராட்சியில் அம்பேத்கர் நகர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டுங்குழியுமாக உள்ளது. இந்த சாலையில் தான் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை உள்ளது. இந்த வழியாகத்தான் பள்ளிக்கு குழந்தைகள் சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சாலை இருப்பதால் புதிய சாலை அமைத்து தர வேண்டும். கொள்ளுக்காடு ஊராட்சியில் நியாயவிலைக் கடை இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடைக்கு சென்றுவர சிரமமாக இருப்பதால், குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே நியாய விலைக் கடை அமைத்து தர வேண்டும். தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளிலும், ரெண்டாம்புளிக்காடு இந்தியன் வங்கி கிளையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் தர மறுக்கும் போக்கு நீடிக்கிறது. எனவே தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த சதவீதமே வழங்கப்படுவதால் சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நியாயமான முறையில் மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பு சதவீதத்தை மருத்துவர்கள் குறிப்பிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க முன்னாள் மாவட்ட துணை தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் எஸ்.ஜே.ராஜேஷ், கண்ணா, மணிகண்டன், குமார், சரவணன், அய்யாவு, குணசேகரன், ரித்திக், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.