தஞ்சாவூர் மாநகராட்சியில் மாடுகளை பிடிக்க 3 பிரத்யேக வாகனங்கள்
தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க 3 பிரத்யேக வாகனங்கள் ஆணையர் தெரிவித்துள்ளார்.;
தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை 3 பிடிப்பதற்கு கூடுதலாக மூன்று பிரத்யேக வாகனங்கள் இயக் கப்படுகிறது என ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மாநகராட்சி பகுதியில் சுற்றிதிரியும் மாடுகளை காப்பகத்திற்கு பிரத்யேக வாகனம் மூலம் கொண்டு சென்று பாதுகாக்கவும் மற்றும் உரிமையாளர்களுக்கு அபராதம் தொகை விதிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சாலைகளில் சுற்றித் திரியும் ஒரே மாடு தொடர்ந்து பிடிக்கப்பட்டால் அதனை கோசாலையில் கொண்டு சென்று விடப்படும் என்று பொது மக்களுக்கு தஞ்சாவூர் மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அறிவுறுத்தலின் படி 14 கோட்டங்களிலும் தீவிரமாக மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் பிடிப்பதற்கு ஏதுவாக ஏற்கெனவே இருந்த ஒரு பிரத்யேக வாகனத்துடன் கூடுதலாக பிரத்யேக மாடு பிடிக்கும் வாகனங்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று சீனிவாசபுரம் செக்கடி பகுதியில் இரண்டு மாடுகள், இரண்டு கன்றுகளை மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி முன்னிலையில் துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன், குழுவினர் பிடித்து காப்பகத்திற்கு கொண்டு சென்று மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
இதுவரை தஞ்சாவூர் மாநகராட்சியில் 86 மாடுகளும், 67 கன்றுகளும் பிடித்து பிரத்யேக வாகனம் மூலம் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை தொடர்ந்து பிடிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.