அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும்
அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, தஞ்சாவூரில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், அதிமுக துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் பல்வேறு தரப்பினரிடமிருந்து மனுக்களை பெற்று, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: அதிமுக தயாரிக்கும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுவதற்காக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழிற் சங்க பிரதிநிகளிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை அறிந்து கொண்டோம். இதற்கு முன்பு தேர்தல் அறிக்கையை நான்கு சுவர்களுக்குள் உட்கார்ந்து, நிர்வாகிகளைக் கேட்டு, அதன் அடிப்படையில் தயார் செய்வோம். தற்போது முற்றிலுமாக, புதுமையாக, பயனுள்ள வகையில் தேர்தல் அறிக்கை அமைய வேண்டும் என்ற காரணத்தால், மக்களையும், அமைப்புகளையும் நேரடியாகச் சந்தித்து வருகிறோம். மேலும், அவர்களது கோரிக்கைகளையும், விருப்பங்களையும் அறிந்து கொண்டு, அவர்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது. எனவே, இத்தேர்தல் அறிக்கை பயனுள்ள அறிக்கையாக இருக்கும். இக்குழு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வந்ததில், மக்களும், தொழில்முனைவோர்களும், சங்கம் நடத்துவோரும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடைய கருத்துகளை உள்வாங்கி, அதன் அடிப்படையில் சிறப்பான தேர்தல் அறிக்கையை பொதுச் செயலரின் ஒப்புதலைப் பெற்று மிக விரைவில் வெளியிடவுள்ளோம். மற்ற அரசியல் கட்சிகள் தயாரித்த தேர்தல் அறிக்கைகளை விட, இது சற்று வித்தியாசமாகவும், பயனுள்ளதாகவும் அமையும். இத்தேர்தல் அறிக்கையில் மக்கள் ஏராளமானோர் வந்து தங்களது கருத்துகளைச் சொல்வதற்கு, அதிமுக மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம். இவர்கள் தெரிவித்த கருத்துகள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, அதன் பின்னரும், அப்பிரச்னைகளுக்கான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நத்தம் விசுவநாதன். இக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.செம்மலை, டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, ஆர்.பி. உதயகுமார், வைகைச்செல்வன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆர். காமராஜ், ஓ.எஸ். மணியன், மாவட்டச் செயலர்கள் மா.சேகர், எம்.ரெத்தினசாமி, ஆர்.கே.பாரதிமோகன், பவுன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.