அலங்கார குளத்தை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை !
சிதிலமடைந்த அலங்கார குளத்தை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரையில், தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்குளத்தில் உள்ள நீரை மானாமதுரை மற்றும் சுற்று வட்டார கோயில்களில் நடக்கும் திருவிழாவிற்கு கரகம் வளர்த்தல், தீச்சட்டி எடுத்தல், முளைப்பாரி ஓடுகளை கரைப்பது, விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வது, ஆடி பிரமோத்ஸவ விழா தீர்த்தவாரி உற்ஸவ நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இப்புனிதமான குளத்தை சுற்றி தடுப்பு சுவர் இல்லை. இதனால், கால்நடைகள் கழிவுகளும், சுற்றுவட்டார பகுதி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குளத்தில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. குளத்தை சுற்றி தடுப்புசுவர் மட்டுமின்றி படிக்கட்டுகள் இல்லாததால், அலங்கார குளம் சிதிலமடைந்து கிடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இக்குளத்தை சீரமைத்து, கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.