தொழுகை முடித்து வந்தவர்களிடம் வாக்கு சேகரித்த தேர்தல் பொறுப்பாளர்
கரூர் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா பள்ளிவாசல் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தேர்தலை முன்னின்று நடத்த கரூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா பொறுப்பேற்றுள்ளார். இன்று கரூர்-கோவை சாலையில் உள்ள அத்தர் ஜமாத் என்னும் சின்ன பள்ளிவாசலில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடித்து வெளியேறிய இஸ்லாமியர்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என, தேர்தல் தொடர்பான துண்டறிக்கையை கொடுத்து வாக்கு சேகரித்தார் .
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகர மண்டல பொறுப்பாளர்கள் கனகராஜ், கோல்டு ஸ்பாட் ராஜா, திமுக நிர்வாகிகள் ஜோதிபாசு, வி.ஜி. குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் கலந்து கொண்டு இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரத்தை கொடுத்து, காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.