கஞ்சா வாங்கி தருவதாக ஏமாற்றிய வாலிபரை கடத்திய கும்பல் கைது

நொளம்பூர் பகுதியில் கஞ்சா வாங்கி தருவதாக ஏமாற்றிய வாலிபரை கடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-01 04:20 GMT

கைது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன், 25, என்பவர், சென்னை, நொளம்பூரில் தங்கி கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, இவர் நொளம்பூர்- முகப்பேர் சந்திப்பு அருகே பைக்கில் சென்ற போது, 8 பேர் கும்பல் மடக்கி, கத்திமுனையில் கடத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரை விசாரித்த நொளம்பூர் போலீசார், சிலம்பரசன் மொபைல் போன் எண்ணை வைத்து, அம்பத்துாரில் உள்ள பெட்ரோல் பங்கில் இருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு சென்று, ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, காயங்களுடன் மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விசாரணையில், நொளம்பூரை சேர்ந்த பழைய குற்றவாளியும், கஞ்சா வியாபாரியுமான ஜெய்கணேஷ் என்பவர், சிலம்பரசன் மற்றும் இவரது நண்பர் பூவரசன் ஆகியோரிடம், 30,000 ரூபாய் கொடுத்து, கஞ்சா வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இவர்கள் கஞ்சா வாங்கித் தராமல் ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த ஜெய்கணேஷ், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து சிலம்பரசனை கடத்தி தாக்கி, பணம் கேட்டு மிரட்டியது தெரிந்தது. கடத்தலில் ஈடுபட்ட நொளம்பூர் ஜெய்கணேஷ் 24, முகப்பேர் மேற்கு கவுதம் 22, மதுரவாயல் ஏரிக்கரை அய்யப்பன் 22, ராஜேஷ் 25, ராஜேஷ் 20, சின்ன நொளம்பூர் வருண் 19, நெற்குன்றம் வினோத் 18, ஆகிய ஏழு பேரை, மதுரவாயல் லட்சுமி நகரில் நேற்று கைது செய்தனர். தலைமறைவான ஹரி மற்றும் விஜய் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News