இரண்டு மாதங்களாக செயல்படாத தொழிலாளர் துறை இணையதளம்
2 மாதங்களாக செயல்படாமல் உள்ள தொழிலாளர் துறை இணையதளம் குறித்து 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையரிடம் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 2 மாதங்களாக செயல்படாமல் உள்ள தொழிலாளர் துறை இணையதளத்தை சரி செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையரிடம் மனு அளித்தனர்.
ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் அளித்த மனுவில், தொழிலாளர் துறை இணையதளம் 2 மாதங்களாக செயல்படாததால் பதிவு, புதுப்பித்தல், கல்வி, திருமணம், ஓய்வூதியம், இறப்பு, விபத்து மரணம் ஆகிய கேட்பு மனுக்கள் உள்ளிட்ட நலவாரிய பணிகளை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இணையதளம் சரிசெய்யப்படும் வரையில் உறுப்பினர்களின் விண்ணபங்களை தொழிற்சங்கங்களிடம் இருந்து பெற்று, தொழிலாளர் உதவி ஆணையர் ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும். மேலும், இணையதளம் சரிசெய்யப்படும் வரை உறுப்பினர்களுக்கு ஏற்படும் அனைத்து நிகழ்வுகளுக்கும் நல வாரியம் பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதில், இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, தமிழக கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் அமைப்புசாரா கட்டுமான உழைக்கும் தொழிலாளர் நலச்சங்கம், தமிழ்நாடு சுபிக்ஷம் அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம், தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் மேம்பாட்டு சங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.