ரூ.10.90 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய அமைச்சர்
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ரூ.10.90 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.;
பட்டா வழங்கல்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், கனிப்பிரியா மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் (15.12.2023) நடைபெற்ற சிறப்பு பட்டா வழங்கும் முகாமில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 1237 பயனாளிகளுக்கு ரூ.10.90 கோடி மதிப்பீட்டிலான வீட்டுமனைப் பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் இராமகிருஷ்ணன் (கம்பம்) மகாராஜன் (ஆண்டிபட்டி) சரவணக்குமார் (பெரியகுளம்) மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையில் ஒவ்வொரு துறையிலும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்களுக்கு எளிதாக பட்டாமாறுதல், புதிய பட்டா பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பட்டா தொடர்பான பணிகள் எளிதில் தீர்வு காணும் வகையில் வருவாய்த்துறை செயலாற்றி வருகிறது. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீடற்ற ஏழை எளிய மக்கள் மற்றும் விளிம்பு நிலையில் வசிக்கின்ற மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் குடியிருப்பு தேவை என்பதை உணர்ந்து, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். அ
தன்படி, முதற்கட்டமாக பெரியகுளம் கோட்டத்தில் நடைபெற்ற பட்டா வழங்கும் முகாமில் 1,360 பயனாளிகளுக்கு சுமார் ரூ.8.84 கோடி மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டது. இன்றைய தினம் நடைபெறும் பட்டா வழங்கும் முகாமில், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட 937 பயனாளிகளுக்கு ரூ.6.58 கோடி மதிப்பீட்டிலும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு ரூ.4.31 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 1,237 பயனாளிகளுக்கு ரூ.10.90 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மட்டும் இதுவரை 4,873 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. நமது மக்களின் முதல்வர் அவர்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார்கள்.
பட்டா விடுபட்டவர்கள் பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அரசின் எந்த திட்டமாக இருந்தாலும் அதனை கடைகோடி மக்கள் வரை கொண்டு செல்வதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கமாகும். ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களை நத்தம் பட்டாவாக மாற்றி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக காலி இடத்திற்கு போடப்பட்ட வரியை நீக்கி முதல் கையெழுத்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமான பணிகளுக்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற்று தற்பொழுது பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி வருகின்ற காலங்களில் தேனி மாவட்டத்திற்கு புதிய திட்டங்களும் பணிகளும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பேசினார். அதனைத் தொடர்ந்து பெரியகுளம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம், கம்பம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்களுக்கு தலா ரூ.13 இலட்சம் மதிப்பிலான ஸ்கார்பியோ வாகனங்களை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.