5 மணி நேரத்தில் தடம் அமர்த்தப்பட்ட ஊட்டி மலை ரயில்
ஊட்டி மலை ரயில் தடம்புரண்ட சம்பவத்தில் ஐந்து மணி நேரத்தில் கிரேன் உதவியுடன் ரயில் பெட்டி தடம் அமர்த்தப்பட்டு குன்னூர் ரயில் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை 46 கிலோமீட்டர் தூரத்திற்கு அழகிய மலைசரிவுகளுக்கு நடுவே பயணிக்கும் ஊட்டி மலை ரயில், இன்று சுமார்.200 பயணககளுடன் ஊட்டி ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஊட்டி ரயில் நிலையத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக பர்ன் ஹில் பகுதியில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது.
பர்ன் ஹில் பகுதியில் மலை ரயில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தின் குறுக்கே தோடர் பழங்குடியின மக்களின் வளர்ப்பு எருமை வந்ததால் மலை ரயில் இன்ஜின் ஓட்டுநர் பிரேக் அழுத்தியதில் மலை ரயில் பெட்டி சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து விலகியது. ரயில் பெட்டியில் மோதிய எருமை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பயணிகளை மீட்டு பத்திரமாக அனுப்பிவைத்தனர். இந்நிலையில் குன்னூர் பணிமனையில் இருந்து வந்த ரயில்வே பணியாளர்கள் கிரேன் உதவியுடன் சுமார் 5மணி நேரத்தில் தடம்புரண்ட ரயில் பெட்டியை தடத்தில் அமர்த்தி குன்னூர் பணிமனைக்கு கொண்டு சென்றனர்.