மதுபான கடையை அகற்றக்கோரி மனு வழங்கிய ஊர் பொதுமக்கள்
ஆனங்கூர் பகுதியில் செயல்படும் அரசு மதுபான கடை மற்றும் பார் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனுக்கள் அளிக்கும் புகார் பெட்டியில் ஆனங்கூர் பகுதி பொதுமக்கள் மனு ஒன்று வழங்கினர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது., நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா ஆனங்கூர் அடுத்துள்ள தேவனாங்குறிச்சி தோக்கவாடி சாலையில், அரசு மதுபான கடை 6002 செயல் பட்டு வருகிறது.
இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது . மேலும் பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பலரும் அத்தியாவசிய தேவைகளுக்கு இந்த வழித்தடத்தை பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மதுபான கடைக்கு வரும் குடிமக்கள் குடித்துவிட்டு, காலி பாட்டில்களை சாலையோரங்களில் ஆங்காங்கே வீசி உடைத்து எறிவதும்,
சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மது போதையில் அவ்வழியே செல்லும் பொது மக்களையும், பெண்களையும் தகாத வார்த்தையில் வசைப்பாடி படியே கடந்து செல்கின்றனர் . மது பிரியர்களால் பொது மக்களுக்கும் பெண்களுக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. மேலும் இது குறித்து அரசு மதுபான கடை பாரை நடத்தும் பார் உரிமையாளர் மாதேஸ்வரனிடம் முறையிட்டால் அவர் குண்டர்களை வைத்து மிரட்டுகிறார். மேலும் 24 மணி நேரமும் இந்த மதுபான பார் செயல்பட்டு வருகிறது.
பொது மக்களுக்கு பிரச்சினையாக இருக்கும் அரசு மதுபான கடையை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நிரந்தரமாக மூட வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது..