மூதாட்டியை மீட்ட போலீசார்
மாட்டுதாவணி பஸ் ஸ்டாண்டில் ரத்தவாந்தி எடுத்த மூதாட்டியை, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிய போக்குவரத்து போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Update: 2023-12-29 09:47 GMT
மதுரை மாட்டுதாவணி பஸ் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் ஆதரவற்ற மூதாட்டி ரத்தவாந்தி எடுத்து மயக்க நிலையில் இருப்பதாக தெரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மதுரை மாநகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, பஞ்சவர்ணம் ஆகியோர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க்கும் வகையில் ரெட்கிராஸ் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். ரெட்கிராஸ் வக்கீல்.முத்துக்குமார் அங்கு சென்று போலீசார் உதவியுடன் ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். விசாரணையில் அந்த மூதாட்டி பெயர் தனலட்சுமி எனவும், கணவர் பெயர் பிச்சை வயது 82 என தெரிந்தது. தூத்துக்குடி மாவட்டம் மணியாட்சியில் உள்ள கடம்பூரை சேர்ந்தவர் என்றும், கொரோனா கால கட்டத்தில் பிள்ளைகள் பிரிந்து சென்று விட்டதால் மதுரை மாட்டுதாவணி பஸ் நிலையத்திலேயே தங்கி விட்டார் எனவும் தெரிந்தது. ரத்தவாந்தி எடுத்த மூதாட்டியை மனித நேயத்துடன் மீட்டு உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்து உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி, பஞ்சவர்ணம் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.