வங்கி நிர்வாகம் தன்னை ஏமாற்றுவதாக கூறி பெண் தர்ணா
ஸ்ரீரங்கத்தில் அடமானம் வைத்த நகையை பணத்தை கட்டி மீட்க தயாராக இருந்தும் வங்கி நிர்வாகம் நகையை மாரு மதிப்பீடு செய்வதாக கூறி வங்கி முன் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி பாலக்கரை உடையான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி ( வயது 50 ). இவர் திருச்சி துறையூர் சாலை பெரமங்கலம் பகுதியில் சொந்தமாக ரைஸ் மில் கட்டி வந்தார். இந்த ரைஸ் மில்லிற்காக –ஸ்ரீரங்கத்தில் செயல்பட்டு வரும் ஒரு வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு 2 கோடி 66 லட்சம் பணம் பெற்றுள்ளார். ராஜலட்சுமி குறிப்பிட்ட நாட்களில் பணத்தை கட்டாததால் ரூ1 கோடியே 80 லட்சத்திற்கு அந்த இடத்தை வங்கி நிர்வாகம் ஏலம் விட்டது . மேலும் 5 வீடுகளையும் ஜப்தி செய்துள்ளது.
இந்நிலையில் இங்கு அடகு வைத்திருந்த 75 பவுன் நகையை மறுமதிப்பீடு செய்ய உள்ளோம் என்ற குறுஞ்செய்தியை கடந்த 2 நாட்களுக்கு முன் ராஜலட்சுமியின் செல்போனுக்கு வங்கி நிர்வாகம் அனுப்பி உள்ளனர். இதனை அடுத்து ஒரே தவணையில் பணத்தை கட்டி நகையை மீட்க தயாராக இருப்பதாகவும் தன்னிடம் நகையை காட்டச் சொல்லி வங்கி நிர்வாகத்திடம் ராஜலட்சுமி உறவினர்களுடன் வந்து கேட்ட போது நகையை காட்ட மறுப்பதாகவும் ஏறத்தாழ ரூ 5 கோடி மதிப்பிலான தனது இடத்தை ரூ 1.8 கோடி க்கு ஏலம் விட்டதோடு தனது வீட்டை ஜப்தி செய்ததோடு – தற்போது நகையை மறு மதிப்பீடு செய்வதாக கூறி முழுவதுமாக வங்கி நிர்வாகம் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டி ராஜலட்சுமி தனது உறவினர்களுடன் வங்கி முன் தர்ணாவில் ஈடுபட முயன்றார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.