சாலையோரம் டாஸ்மாக் கடை; அச்சத்தில் செல்லும் பெண்கள்
மதுராந்தகத்தில் சாலையோரம் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி, மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-02-08 14:12 GMT
தற்காலிக பேருந்து நிலையத்திற்கும், டவுன் பகுதிக்கும் இடையே, 1 கிலோ மீட்டர் துாரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த தற்காலிக பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவியர் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். மேலும், டாஸ்மாக் கடை அருகே சாலையில் வேகத்தடை உள்ளது. அப்பகுதியில், மது அருந்தும் 'குடி'மகன்கள், வேகத்தடை அருகே தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மெதுவாக கடக்கும் போது, பேருந்தில் ஏற முற்படுகின்றனர். இதனால், தவறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை அகற்றிவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.