தேயிலை வாரிய அதிகாரி வீட்டில் திருடியவர் கைது
தேயிலை வாரிய அதிகாரி வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு, பாலாஜி நகரை சேர்ந்தவர் விவேக் (35). குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகத்தில் மதிப்பீட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தேயிலை வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்காக கடந்த 24-ம் தேதி சென்றார். ஆனால் நிர்வாக காரணங்களால் கூட்டம் ரத்தானதால், குடும்பத்தினருடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார் .
இந்தநிலையில் இவரது வீட்டின் கதவு உடைந்து திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்ததால், விவேக் வீட்டில் வந்து பார்த்தார். இதில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5.75 பவன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. இது குறித்து அருவங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது கோவை மாவட்டம் ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான வனராஜ் வந்து சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பழைய கரும்பாலம் அம்மன் கோவில் பகுதியில் பதுங்கி இருந்த வனராஜை போலீஸார் விசாரித்தனர். இதில் தேயிலை வாரிய அதிகாரி வீட்டில் திருடியது, வனராஜ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த நகைகள் மீட்கப்பட்டது. மேலும் பாத்திர வியாபாரியாக இருந்த வனராஜ் கடன் தொல்லை அதிகமானதால் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் சிறையில் இருந்து வெளியில் வந்ததும் தெரியவந்தது. .