குளித்தலையில் நள்ளிரவில் குல்லா அணிந்து திருட்டு: போலீசார் விசாரணை
குளித்தலையில் நள்ளிரவில் குல்லா அணிந்து திருட்டில் ஈடுபட்டவரை பிடித்தும் தப்பி ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட, பெரியார் நகர் அருகே உள்ள பாலாஜி நகரில் கடந்த 22ம் தேதி அன்று நள்ளிரவில் கதவு திறந்திருந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தாண்டி சென்று 2 செல்போன்கள், மரப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.
அதேபோல் மற்றொரு வீட்டில் உள் தாழ்ப்பாள் போட்ட கதவின் அருகே கண்ணாடியை உடைத்து தாழ்ப்பாளை திறந்து உள்ளே சென்று பொருட்கள் இல்லாததால் திரும்பிச் சென்றுள்ளனர். இரு சம்பவங்கள் குறித்து குறித்து அளித்த புகாரின் பேரில் குளித்தலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், மீண்டும் அதே வீட்டில் நேற்று நள்ளிரவு குல்லா அணிந்த மர்மநபர்கள் கதவைத் தட்டியுள்ளனர். சுதாரித்த நாகராஜன் தம்பதியினர் கதவை திறக்காமல் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது, தலையில் குல்லா அணிந்த நபர் டார்ச் லைட் அடித்துக் கொண்டு அங்கிருந்து கீழே இறங்கி சென்றுள்ளார். பிறகு கீழ் வீட்டில் கருப்பண்ணன் ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் தேடி விட்டு பொருட்களை ஏதும் இல்லாததால் திரும்பிச் செல்லும்போது அவர்களில் ஒருவர் பொது மக்களிடம் மாட்டிக் கொண்டார்.
பிடிபட்டவரிடம் அப்பகுதி மக்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். அப்போது சுதாரித்துக் கொண்ட குல்லா அணிந்த மர்ம நபர் அவர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடி அருகில் உள்ள வயல்வெளியில் புகுந்து தலைமுறைவாகிவிட்டார்.
பதட்டத்தில் செல்லும்போது குள்ள அணிந்த நபர் கொண்டு வந்த இரண்டு பைகளை தவற விட்டு விட்டார். அதனை எடுத்து சோதித்த போது கையில் அணியும் உறைகள், மாஸ்க், குல்லா உள்ளிட்ட களவாடுவதற்கு தேவையான பொருட்கள் அதிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், திருட்டில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளித்தலை நகரப் பகுதியில் உள்ள பாலாஜி நகரில் 2-வது முறையாக திருட்டு சம்பவம் அரங்கேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர்.