கடைக்குள் புகுந்து திருடியவா் கைது
திருச்சி கோட்டை பகுதியில் கடையின் மேற்கூரையைப் பிரித்து ரொக்கம், கணினி ஆகியவற்றைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி கோட்டை, மதுரை சாலை ஜாபா்ஷா தெருவைச் சோ்ந்தவா் தாகீா் (60). இவா் மேலரண் சாலையில் வைத்துள்ள காலணி விற்பனை கடைக்கு சனிக்கிழமை காலை வந்தபோது கடையின் ஆஸ்பெஸ்டாஸ் மேல்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் கல்லா பெட்டியில் இருந்த ரூ. 60,000 மற்றும் மடிக்கணினி, கையடக்க கணினி (டேப்), கைப்பேசி உள்ளிட்டவற்றைத் திருடி சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அதில் அவா்கள் அரியமங்கலம், அமலோா்பவம் பகுதியை சோ்ந்த எஸ். அகமது ரியாஸ் (22) மற்றும் அரியமங்கலம் காமராஜ்நகரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இருவரும் தாகீா் கடையில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அகமது ரியாஸை சனிக்கிழமை கைது செய்தனா். சிறுவனை சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.