முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம்
சிவகங்கையில் முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வானை தாயாருடன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
Update: 2024-03-23 06:58 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்தர பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக கோவில் மண்டபத்தில் உற்சவர் விநாயக பெருமாள், ஸ்ரீ காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்பாள் ஆகியோர் சர்வ அலங்காரத்திலும், ஸ்ரீ முருகப்பெருமான் வள்ளி தெய்வானை தேவியர்களுடன் மனக்கோளத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து முருக பெருமானுக்கு வள்ளி தெய்வானை தேவியர்களுக்கு காப்பு கட்டு வைபவம் பூணல் அணிவித்தல், வஸ்திரம் பட்டு சேலை சாத்துதல் போன்ற வைபவங்கள் நடைபெற்று கன்னிகா தானம் பூஜைகள் மற்றும் யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி தெய்வானை தேவி அவர்களுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாலை மாற்று வைபவம் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வங்களின் திருக்கல்யாணத்தை கண்டு வழிபாடு செய்தனர்.