வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
செங்கல்பட்டு மாவட்டம், கடமலைப்புத்துாரில் நடைபெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுபாக்கம் அடுத்த கடமலைப்புத்துாரில், பெருந்தேவி தாயார் உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ராமநவமி கர்ப்ப உற்சவ பெருவிழா மற்றும் 16-ம் ஆண்டு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நேற்று, காலை 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் துவங்கப்பட்டு, மங்கல இசை நிகழ்த்தப்பட்டது.பின், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. பின், ஸ்ரீபகவத்கீதா பாராயணம் நடந்தது.
பிற்பகலில், நாலாயிர திவ்யபிரபந்தம் மற்றும் இராம காவிய பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வாக, மாலை 5:00 மணிக்கு, ராமர்- - சீதாலட்சுமி திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக உற்சவம் நடந்தது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ராமர் -- சீதாலட்சுமி திருக்கல்யாண பட்டாபிஷேக சிறப்பு அலங்காரத்தில், பஜனை குழுவினருடன் முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது.
இதில், பெண்கள் இல்லங்கள்தோறும் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து ராமர் -- சீதாலட்சுமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.