திருவண்ணாமலை மோப்ப நாய் பெஸ்சி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்ட துப்பரியும் பிரிவில் பணியாற்றிய மோப்ப நாய் பெஸ்சி உயிரிழப்பு: எஸ்பி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், போலீஸ் துப்பரியும் பிரிவில் 9 ஆண்டுகள் பணிபுரிந்து பல்வேறு பரிசுகளை வென்ற மோப்ப நாய் பெஸ்சி உடல் நலக்குறைவால் இறந்தது. அதன் உடலுக்கு மலர் தூவி எஸ்பி கார்த்திகேயன் மரியாதை செலுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் துப்பரியும் பிரிவில் பணிபுரிந்த மோப்ப நாய் பெஸ்சி(14) நேற்று உடல் நலக்குறைவால் இறந்தது. தொடர்ந்து 9 ஆண்டுகள் துப்பரியும் பிரிவில் துடிப்புடன் பணியாற்றிய மோப்ப நாய் மெஸ்சி, வயது முதிர்வு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு ஓய்வுபெற்றது.
ஆனாலும், தொடர்ந்து துப்பரியும் பிரிவில் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களாக அதன் உடல் நிலை மோசமாகி நேற்று உயிரிழந்தது. அதைத்தொடர்ந்து, மோப்ப நாய் மெஸ்சி உடலுக்கு, எஸ்பி கார்த்திகேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ஆயுதப்படை வளாகத்தில் மெஸ்சி அடக்கம் செய்யப்பட்டது.
மாநில அளவில் நடந்த காவல்துறை துப்பரியும் போட்டிகளில் பங்கேற்று பலமுறை மோப்ப நாய் மெஸ்சி பரிசுகளை வென்றிருக்கிறது. மேலும், பல்வேறு கொள்ளை, திருட்டு வழக்குகளில் துப்புத்துலக்க மெஸ்சி காரணமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்ட துப்பரியும் மோப்ப நாய் பிரிவில், தற்போது ஜான்சி, தென்றல், மியா, வீரா ஆகிய நான்கு மோப்ப நாய்கள் பணியில் உள்ளன. அதில், ஜான்சி, தென்றல் ஆகியவை கிரைம் பணிகளுக்கும், மியா, வீரா ஆகியவை அதி முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.