பெருந்திரள் முறையீடு மனு அளிக்க முயன்றவர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு கிராமத்தில் அமைச்சரின் இல்லத்திற்கு பேரணியாக சென்று பெருந்திரள் முறையீடு மனு அளிக்க முயன்ற தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க பணியாளர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-25 06:15 GMT

பெருந்திரள் மனு அளிக்க வந்தவர் கைது

திருச்சுழி அருகே மறையூர் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ரூ 6 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். ஆனால் திறந்து வைத்து மூன்றே நாட்களுக்குள் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் கீழ் பகுதியில் சென்ற தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து தண்ணீர் பேருந்து நிறுத்தத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி புதியதாக திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் முழுவதும் சேதமடைந்தது.

பேருந்து நிறுத்தத்தை உடைத்துக் கொண்டு தண்ணீர் வெளியேறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை அடுத்து தவறான இடத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்க வேலை உத்தரவு வழங்கியதாக நரிக்குடி பிடிஓ ராஜசேகரன்(வ.ஊ) மற்றும் இளநிலைப் பொறியாளர் பிரபா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காரியாபட்டி அருகே தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக அமைச்சரின் இல்லத்திற்கு சென்று அமைச்சரை சந்தித்து பெருந்திரள் முறையீட்டு மனு அளிக்க திட்டமிட்டிருந்தனர்.

இதற்கு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அனுமதி மறுத்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் வீட்டின் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தினர் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது. அதனைத் தொடர்ந்து அமைச்சரின் வீட்டிற்கு பேரணியாக செல்ல முயன்ற தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க பணியாளர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் பேச்சு வார்த்தை ஏற்க மறுத்ததால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இதனால் அமைச்சரின் சொந்த ஊரில் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News