பெட்ரோல் கேனுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மேல் ஏறி நின்று தற்கொலை மிரட்டல்

கலியனூர் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது பெட்ரோல் கேனுடன் ஏறி நின்று தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு

Update: 2024-06-20 06:21 GMT
காஞ்சிபுரம் அடுத்த கலியனூர் கிராமத்தில் தனது சொத்தை உறவினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அபகரிப்பதாக கூறி 60 அடி உயர குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது பெட்ரோல் கேனுடன் ஏறி நின்று தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது . சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து 4 மணி நேர சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பத்திரமாக அழைத்து வந்தனர். காஞ்சிபுரம் தாலுகா கலியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானம். கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இவரின் தந்தைக்கு இரு மனைவிகள் இருந்த நிலையில் முதல் மனைவியின் மகனான ஞானத்தின் குடும்பத்திற்கு சொந்தமாக சுமார் 48 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இரண்டாவது மனைவியின் குடும்பத்தை சேர்ந்த இந்துமதி,சின்ன தம்பி, சரவணன், பஞ்சாமிருதம் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உதவியோடு ஞானத்தின் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஞானம் வாலாஜாபாத் போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து பண பலம் உள்ள இரண்டாவது மனைவியின் குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட ஞானம் இன்று இரண்டு பெட்ரோல் கேன்களை எடுத்துக்கொண்டு கலியனூர் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று கொண்டு சொத்து பிரச்சினை மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி மிரட்டல் கொடுத்தார்.இதனால் கலியனூர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்து வாலாஜாபாத் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று தற்கொலை செய்து கொள்ள மிரட்டல் விடுத்த ஞானத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி ஞானத்தை சமாதானப்படுத்தி கீழே இறக்கினார்கள். சொத்து தகராறு காரணமாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்த சம்பவத்தால் கலியனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News