உத்திரமேரூரில் மின்மாற்றி உதிரி பாகங்கள் திருட முயற்சி: மூவர் கைது
உத்திரமேரூரில் மின்மாற்றி உதிரி பாகங்கள் திருட முயற்சித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் புதிய காவல் நிலையம் அருகே உத்திரமேரூர் மின்சார வாரியத்தின் சார்பில் பழுதான மின்மாற்றிகள் அங்குள்ள காலி இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் விநாயகம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது மின்மாற்றி அருகே மறைந்து இருந்த இருவர் தப்பித்து ஓட முற்பட்டனர். அவர்களையும் மடக்கிப் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், உத்திரமேரூர் அடுத்த வயலூர் ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்த காளீஸ்வரன் வயது 20, அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் வயது 23, கார்த்திக் வயது 22 என்பதும் இவர்கள் மூவரும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மின்மாற்றியை தனித்தனியாக கழற்றி விற்க முற்பட்டு உள்ளதாக தெரியவந்தது.
இதனை அடுத்து திருடுவதற்கு பயன்படுத்திய ஸ்பேனர், கட்டிங் பிளேயர் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடோடிகளாக வாழ்ந்த நரிக்குறவர்கள் மேற்கொண்டு வந்த பாரம்பரிய தொழிலான வேட்டையாடுதல் போன்ற தொழிலுக்கு அரசு கடும் கட்டுப்பாடு விதித்துருப்பதால் இது போன்ற நரிக்குறவர்கள் ஏராளமானோர் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.