கொலை வழக்கில் இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை அருகே கொலை வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட குடுமியான்மலை குகைக்குளம் சாலை பகுதியிலுள்ள தைலமரக் காட்டில் மேல 2ஆம் வீதியைச் சேர்ந்த செல்வம் (31) என்பவர் கடந்த 2011 மார்ச் 23ஆம் தேதி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.இந்த வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்ட அன்னவாசல் போலீஸார், ஒக்கூரைச் சேர்ந்த பாஸ்கர் (42), பிரபு (40) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி பாபுலால் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் கொலை செய்ததற்கான பிரிவுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதற்காக அப்பிரிவுகளில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். அதேநேரத்தில் செல்வம் அணிந்திருந்த நகைகள், கைப்பேசி ஆகியவை பாஸ்கர்,பிரபு ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பிரிவுகளின் கீழ் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.