கோயிலின் பூட்டை உடைத்து தங்கம்,வெள்ளி ஆபரணங்கள் கொள்ளை.

துறையூர் அருகே வைரிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஸ்ரீ மாசி பெரியண்ணசாமி கோயிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வெள்ளிக் கவசங்கள்,தங்க ஆபரணங்களை திருடிச் சென்றனர்.

Update: 2024-05-16 07:15 GMT

பைல் படம் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வைரிசெட்டிபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஸ்ரீ மாசி பெரியண்ணசாமி,கோயில் வளாகம் சுமார் இரண்டு ஏக்கர் நிலம் பரப்பளவில் அமைந்துள்ளது. நேற்று மாலை கோயில் பூசாரியான சோமசுந்தரம் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலைப் பூட்டி சாவிகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இன்று காலை வழக்கம்போல் தினசரி பூஜைகளுக்காக கோயிலை திறக்க வந்தவர், மாசி பெரியண்ணசாமி சன்னதி பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கோயில் மதில் சுவரை ஏறி குதித்து ஸ்ரீ மாசி பெரியண்ணசாமி சன்னதியின் பூட்டை உடைத்து ஸ்ரீ மாசி பெரியண்ணசாமி அன்னகாமாட்சி சாமிகளின் மேல் சாத்தப்பட்டிருந்த வெள்ளிக் கவசங்கள் கிரீடங்கள் தங்க ஆபரணங்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதில் சுமார் 4 கிலோ வெள்ளி பொருட்கள் இரண்டு பவுன் தங்க ஆபரணங்கள் திருட்டு போனதாக கோயில் அறங்காவலர் பிரதாப்பெரியண்ணன் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு திருச்சியில் இருந்து மோப்பநாய், கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கோவிலின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News