திருப்பூர் 15 வேலம்பாளையம் அருகே மர்மமான முறையில் வாலிபர் மரணம்!
திருப்பூர் 15வேலம்பாளையம் அருகே மர்மமான முறையில் வாலிபர் மரணம். மரணமடைந்த வாலிபரின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.
Update: 2024-06-19 11:46 GMT
திருப்பூர் 15 வேலம்பாளையம் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மூத்த மகன் மோகன் (30). இவர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும் 4 மாத குழந்தையும் உள்ளனர் . இந்நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அனுப்பர்பாளையம் போலீசார் மோகனின் உறவினர்களை தொடர்பு கொண்டு வேலம்பாளையம் அருகே காட்டுப்பகுதியில் மோகன் உயிரிழந்து கிடப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மோகன் உடலை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மோகனின் தந்தை ஈஸ்வரன் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட இருந்த நிலையில் மோகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மோகன் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். இது குறித்து உறவினர்கள் கூறியதாவது , எப்போதும் போல பணிக்கு சென்ற மோகன் ஒரு நாள் முழுவதும் வீடு திரும்பவில்லை. மறுநாள் மோகன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மது குடிக்கும் பழக்கம் இருந்தாலும் கூட தன்னை மறக்கும் அளவிற்கு அவர் குடி போதைக்கு அடிமையானவர் இல்லை. மேலும் துணிகள் சில இடங்களில் கிழிக்கப்பட்டும் , செருப்பு வெவ்வேறு பகுதிகளில் இருந்ததாகவும், கைவிரலில் காயம் இருந்துள்ளது. அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் உள்ளவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் மதுபான கடையில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தங்களிடம் காண்பிக்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து அனுப்பர்பாளையம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் தங்கள் சந்தேகங்களை புகார் மனுவாக எழுதிக் கொடுத்த பின்பு மோகனின் உடலை பெற்றுச் சென்றனர்.