திருவாரூர் - பட்டுக்கோட்டை டெமு ரயில் இயக்கம்

திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையே டெமு ரயில் இயக்கபடுகிறது.

Update: 2024-04-27 11:40 GMT

கோப்பு படம் 

திருவாரூர்-பட்டுக்கோட்டை இடையே புதிய டெமு ரயில் வருகிற மே.3- ஆம் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி ரயில்வே கோட்டம் சார்பாக திருவாரூர்  சந்திப்பில் இருந்து, 

பட்டுக்கோட்டைக்கு புதிய டெமு பயணிகள் சிறப்பு ரயில் (வண்டி எண் 06851/06852) வருகிற 3-ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  இந்த டெமு ரயில் வாரத்தில் 5 நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை இயங்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது. திருவாரூரில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு மாங்குடி,

மாவூர் சாலை, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக பட்டுக்கோட்டைக்கு காலை 10.05 மணிக்கு வந்து சேரும். மீண்டும் இந்த ரயில் பட்டுக்கோட்டையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு 6.55 மணிக்கு சென்றடைகிறது.

இந்த ரயில் வழித்தடத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வியாபாரிகள், ரயில் பயணிகள், அலுவலர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ரயிலை இயக்க உத்தரவிட்ட தெற்கு ரயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே  மேலாளர், முதுநிலை  கோட்ட இயக்கவியல் மேலாளர், முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் மற்றும்  அனைத்து ரயில்வே அதிகாரிகளுக்கும் இந்த தடத்தில் உள்ள ரயில் பயணிகள். வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள், தன்னார்வ அமைப்புகள், பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.  திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரயில் நேரம் மாற்றம்  திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரயில்(வண்டி  எண் 06197/06198) திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை  வழியாக காரைக்குடி சென்று மீண்டும் திருவாரூரை வந்தடைகிறது.

இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 6 நாட்கள் இயங்கி வருகிறது. வருகிற 3-ஆம் தேதியில் இருந்து இந்த ரயிலின் பயண நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் திருவாரூரில் காலை 6.20 மணிக்கு புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு காலை 7.56 மணிக்கு வந்தடைந்து மீண்டும் புறப்பட்டு  காரைக்குடியை காலை 9.35 மணிக்கு சென்றடைகிறது. மீண்டும் இந்த ரயில் மாலை 6 மணிக்கு காரைக்குடியில் புறப்பட்டு பட்டுக்கோட்டைக்கு இரவு 7.13 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து திருவாரூக்கு இரவு 9.25 மணிக்கு சென்றடைகிறது. கம்பன்-மன்னை விரைவு ரயில்களில்,

இந்த நேர மாற்றத்தின் காரணமாக அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்ல இந்த ரயிலில் திருவாரூருக்கு சென்றால், திருவாரூரில் காரைக்கால்- சென்னை எழும்பூர் கம்பன் விரைவு ரயில் (வண்டி எண் 16176) மன்னை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16180) விரைவு ரயில்களில் திருவாரூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லலாம். அதே போல சென்னையில் இருந்து இந்த பகுதிகளுக்கு வருபவர்கள் திருவாரூரில் இருந்து இந்த ரயிலின் மூலமாக இந்தப் பகுதிகளுக்கு வரலாம்.

மேலும் இந்த ரயில் திருச்சி- காரைக்குடி டெமு ரயிலுக்கு இணைப்பு ரயிலாகவும் இருக்கும். காரைக்குடியில் இருந்து திருச்சி- காரைக்குடி டெமு ரயில் மூலமாக புதுக்கோட்டை மற்றும் திருச்சிக்கும் சென்று வரலாம் என்பதால் பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags:    

Similar News