அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் நியமிக்க தமுமுக கோரிக்கை.
Update: 2023-11-30 02:54 GMT
குமரி மாவட்டம் குளச்சலில் த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நகர செயலாளர் மாஹின் தலைமையில் நடந்தது. பொருளாளர் யாசர் அரபாத், த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் பயாஸ் ஹக்கீம் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக த.மு.மு.க மாவட்ட செயலாளர் நவாஸ் கான், ம.ம.க மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக், மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது உவைஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மழை காலத்தில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள், முதியவர்கள் வைரஸ் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். இதை உடனடியாக கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் சாக்கடையை சுத்தம் செய்து கொசு உற்பத்தியை தடுக்கும் விதமாக கொசு மருந்து அடிக்க வேண்டும். குளச்சல் அரசு மருத்துவமணையில் போதிய மருத்துவர், மருந்து இல்லாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அரசு மருத்துவமனையை சீரமைக்க மாவட்ட சுகாதார நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்பது உள்பட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.