புகையான் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்ற...!
புகையான் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிரை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் புகையான் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டிருந்த நெற் பயிர்களை அண்மையில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பயிர்ப் பாதுகாப்பு இயக்குநர் மூ.சாந்தி, பூச்சியியல் துறை தலைவர் மா.முருகன், நோயியியல் துறை தலைவர்கள் க.அங்கப்பன், கா.ராஜப்பன், இணைப் பேராசிரியர் ச.ஹரீஷ், பூச்சியியல் துறை பேராசிரியர் பி.ஆனந்தி, பயிர் நோயியியல் துறை பேராசிரியர் சு.மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, அந்த நெற்பயிர்களைக் காப்பாற்றுவது தொடர்பாக அவர்கள் கூறிய வழி முறைகள்: புகையான் பூச்சிகள் நெற்பயிர் வேர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதால், பயிர் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் பழுப்பு நிறமாகும். இந்த பூச்சியால் பாதிக்கப்பட்ட வயல்களில் ஆங்காங்கே வட்டமாக புகைந்தது போல காணப்படும். இதைக் கட்டுப்படுத்த நடவு வயலில் 8 அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு பாத்தி நடவு செய்து, மண் பரிசோதனை பரிந்துரையின்படி தழைச்சத்தை களைகளை அகற்றி 3 அல்லது 4 முறை இட வேண்டும். புகையான் பூச்சி எதிர்ப்புத் திறன், தாங்கும் திறன் கொண்ட ரகங்களைப் பயிரிடுவதுடன், விளக்குப்பொறி அமைத்து புகையான் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அழிக்கலாம்.
தேவைக்கு அதிகமாக நீர்ப் பாய்ச்சுவதை தவிர்ப்பதுடன், வயலில் நீர் முழுமையாக வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும். பாதிப்பு குறைவாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு வேப்ப எண்ணெய் 3 சதவீதம் (6 லி.) அல்லது இலுப்பை எண்ணெய் 6 சதவீதம் (12 லி) அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் (10 லி) தெளிக்கலாம். பாதிப்பு அதிகமாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு பியுப்ரோசன் 25 சதவீதம், எஸ்சி 300 மி.லி. அல்லது குளோரோடேரினிலிபுருள் 18 சதவீதம், எஸ்சி 60 கிராம் அல்லது குளோதயானிடின் 50 சதவீதம், டபுள்யூஜி 8- 9.6 கிராம் அல்லது டைநோட்டிபெரான் 15 சதவீதம் மற்றும் பைமெட்ரோசைன் 45 சத வீதம் (200 கிராம்) இவைகளில் ஏதா வது ஒன்றை 200 லிட்டர் தண்ணீ ரில் கலந்து தெளிக்க வேண்டும்" என்றார்.