சுங்கச்சாவடி கட்டணங்களால் விலைவாசி உயர்கிறது - விக்கிரமராஜா தகவல்

நாமக்கல்லில் மாவட்ட பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-23 08:28 GMT
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், நாமக்கல்லில் மாவட்ட பேரமைப்பு நிர்வாகிகள் மற்றும் இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசியதாவது: மதுரையில் மே 5-ஆம் தேதி ‘வணிகா் விடுதலை முழக்க மாநாடு’ என்ற தலைப்பில் எங்களுடைய பேரமைப்பு சாா்பில் மாநாட்டை நடத்த இருக்கிறோம். அரசின் பல்வேறு வரி விதிப்புகளால் வணிகர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஆன்லைன் வர்த்தகத்தால் 17 சதவீதம் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியா முழுவதும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். உணவு பாதுகாப்பு துறையினர் பல்வேறு சட்டங்களின் மூலம் வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார்கள். மாநில மாநாட்டுக்கு பின்பு ஆயிரக்கணக்கான வணிகர்களை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்.அரசு பல்வேறு வரிகளை விரித்து வணிகர்களுக்கு நெருக்கடி தருகிறது. சமூக விரோதிகளால் ஆங்காங்கே உணவகங்களிலும், வணிக நிறுவனங்களிலும் அதன் உரிமையாளா்கள், ஊழியா்கள் தாக்கப்படுகின்றனா். மருத்துவரைத் தாக்கினால் எவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கும் சட்டம் உள்ளதோ, அதேபோன்று வணிகா்களைத் தாக்கினால் உடனடி சிறை என்கிற சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்.மாநகராட்சி பகுதிகளில் கட்டிடத்திற்கான உரிமம் ரசீது இருந்தால் மட்டுமே கடை நடத்த அனுமதி வழங்கப்படும் என நெருக்கடி கொடுக்கப்படுகிறது. ஆன்லைனில் போலி விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றோம். விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, வரும் நாட்களில் அரிசி விலை மேலும் அதிகரிக்கும்.விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமாயில் இறக்குமதியை அரசு தடை செய்ய வேண்டும்.அரசு தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கினால் விவசாயிகள், பொதுமக்கள் நன்றாக இருப்பார்கள். சுங்கச்சாவடி கட்டணங்களால் விலைவாசி உயர்கிறது. வரும் ஆண்டுகளில் சாலை எங்கும் சுங்கச்சாவடி அதிகரிக்கும் இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள வணிகர்கள் கேரளாவில் சென்று மால் திறக்க முடியாது. ஆனால், அவர்களால் தமிழகத்தில் மால் திறக்க முடிகிறது. தமிழகத்தில் ஒரு மால் திறக்கப்பட்டால் சுமார் 10 ஆயிரம் வணிகர்கள் அந்த பகுதியில் பாதிக்கப்படுவார்கள். எனவே, இங்குள்ள வணிகர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், முன்னாள் தலைவா் பெரியசாமி, சேலம் மாவட்டத் தலைவா் பெரியசாமி, நிா்வாகிகள் பலா் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News