அருப்புக்கோட்டையில் திமுக நெசவாளர் அணி சார்பில் வர்த்தக கண்காட்சி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக மாநில நெசவாளர் அணி சார்பில் கைத்தறி நெசவாளர்களின் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வேல்ராஜன் மண்டபத்தில் திமுக மாநில நெசவாளர் அணி தெற்கு மண்டலம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்களின் மாபெரும் நேரடி விற்பனை மற்றும் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
இந்த நேரடி விற்பனை மற்றும் கண்காட்சியை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த கண்காட்சியில் அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள், ஈரோடு போர்வைகள், பவானி ஜமுக்காளம், திருப்பூர் மென்பட்டு சேலைகள், கோவை ஆர்கானிக் காட்டன் சேலைகள்,
சேலம் வெண்பட்டு வேஷ்டிகள்,.காஞ்சிபுரம் பட்டு சேலைகள், மதுரை சுங்கிடி சேலைகள், திருநெல்வேலி செடிபுட்டா சேலைகள் என பல்வேறு ஊர்களில் சிறப்பு வாய்ந்த ஜவுளி வகைகள் இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது. நெசவாளர் அணி மாநில துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார்.
பல்வேறு ஊர்களில் சிறப்பு வாய்ந்த ஜவுளிகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் ஏராளமான பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான ஜவுளிகள் வாங்கிச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அண்ணாத்துரை, வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கடம்பவளம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த வர்த்தக கண்காட்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.