நாமக்கலில் பாராம்பரிய உணவு கண்காட்சி
நாமக்கலில் மாணவ மாணவிகளின் உணவு திருவிழா அரங்குகளை சித்த கு. சிவராமன் பார்வையிட்டார்.
பாரம்பரிய உணவு திருவிழா -2024 சேந்தமங்கலம் விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று மற்றும் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன் பங்கேற்று கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பொன்னம்மா புதூரில் செயல்பட்டு வரும் விவேகா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ, மாணவிகள் பாரம்பரிய உணவு திருவிழாவை ஏற்பாடு செய்து அசத்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக பிரபல சித்த மருத்துவர், தீவிர சூழலியல் செயல்பாட்டாளர், உணவியல் ஆய்வாளர், நம் பாரம்பரிய உணவுமுறையை வாழ்வியல் நெறிகளை மீட்டெடுக்கும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படுபவர்,
மத்திய அரசின் 12-ஆவது திட்டக்குழுவில் சித்த மருத்துவத்துக்கான ஆலோசகர், சமூகஆர்வலர். இன்னும் பல அடையாளங்களைக் கொண்டவர் மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் இன்று நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று "இன்றைய சூழலில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பாரம்பரிய உணவும் ஊட்டச்சத்தும்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக அவர் விவேகா பள்ளி மாணவ மாணவிகளின் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதில் பாரம்பரிய விதைகள், அரிசி, பருப்பு வகைகள், மூலிகை வகைகள் ,மற்றும் சிறுதானியங்கள், அடுப்பில்லாமல் எப்படி சமையல் செய்வது என்று கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன.
செக்கு எண்ணெய், தமிழகத்தில் உள்ள மலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேன் வகைகள், மரபு திண்பண்டங்கள் , விளையாட்டு பொருட்கள், பழங்கால நாணயங்கள், வெளிநாட்டு கரன்சிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்த பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.