தேர்தல் பறக்கும்படை அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் பறக்கும்படை அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், பறக்கும்படை அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் - 2024 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம், பறக்கும்படை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில், தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள் அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து அரசு அலுவலர்களும், காவல் துறையை சார்ந்தவர்களும் கண்காணிப்பு குழுக்களை சார்ந்தவர்களும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றி நடுநிலையுடன் விழிப்புடன் பணியாற்றிட வேண்டும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வாகன தணிக்கையின்போது பொதுமக்களிடம் முரண்பாடுகளை தவிர்த்து இயல்பான அணுகுமுறையுடன் கண்ணியமான முறையில் நடந்து கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்படும் பரிசுப்பொருட்கள், ஆபரணங்கள், ரொக்கப்பணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியவுடன், உடனடியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தகவல் தெரிவித்த்திட வேண்டும். அதேநேரத்தில், இதற்கான பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும். அதனை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட இடம், வாகன எண், கைப்பற்றப்பட்ட நேரம் உள்ளிட்ட ஆதாரங்களுடன் சரியான முறையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், ஊரக வளர்ச்சி முகமை கணக்கு அலுவலர் ஆனந்தன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.