கரூர் அருகே 6 டன் தாரை களவாடிய இருவர் கைது
கரூர் அருகே ரூ.3லட்சம் மதிப்புள்ள 6 டன் தாரை களவாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, மொஞ்சனூர் அருகே கருஞ்செல்லி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் மகன் அருண்குமார் வயது 37. இவர் வெற்றி என்ற பெயரில் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, நாயக்கனூர் அருகே உள்ள மணியன் நகர் பகுதியை சேர்ந்த பசுபதி வயது 30 என்பவர் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இதே நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, உடையார் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது 35 என்பவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 11 மணியளவில், கோடந்தூர் அருகே முத்தம்பாளைத்தில், செயல்படும் வெற்றி நிறுவனத்தில் ரூ. மூன்று லட்சம் மதிப்புள்ள 6டன் தார்-ஐ பசுபதி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் களவாடியுள்ளனர்.
இது தொடர்பாக வெற்றி நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குற்றச்செயலில் ஈடுபட்ட பசுபதி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தென்னிலை காவல்துறையினர்.