ரேஷன் அரிசி கடத்தல் - 2 பேர் கைது
சேலம் மாவட்டம்,மணிவிழுந்தான் பகுதியில் கோழிபண்ணைக்கு ரேஷன் அரிசியை கடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மணிவிழுந்தான் காலனி பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணைக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கோழிப்பண்ணைக்கு பின்புறம் நின்ற சரக்கு வாகனத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் 50 கிலோ எடை கொண்ட 32 மூட்டைகளில் 1,600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மணிவிழுந்தான் காலனியை சேர்ந்த பழனியப்பன் (வயது 57), வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சஞ்சீவிராயபுரம் பகுதியை சேர்ந்த குணா (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி பின்னர் அதை தீவனத்துக்காக கோழிப்பண்ணைக்கு கடத்தி வந்து விற்க முயன்றது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.