வழிப்பறிப்பில் ஈடுபட்ட மதுரை வாலிபர்கள் இருவர் கைது
குமாரபாளையம் அருகே வழிப்பறிப்பில் ஈடுபட்ட மதுரை வாலிபர்கள் இரண்டு பேர் கைது.
Update: 2024-02-22 10:46 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பெராந்தர்காடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சுமதி. ஜவுளி தொழில் செய்துவருகிறார். கடந்த 15 ஆம் தேதி அன்று சேலம் முதன்மை சாலை பகுதியில் உள்ள வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிய பொழுது, இரண்டு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த மர்ம நபர்கள் சுமதியை தாக்கி அவர் அணிந்திருந்த நான்கு பவுண் தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னலாய் மறைந்தனர். இது குறித்து சுமதியின் கணவர் சந்திரசேகர் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் விசாரணையின் முதல் கட்டமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொழுது, உரிய தகவல்கள் கிடைக்காத நிலையில், இரண்டாவது கட்டமாக தமிழகம் முழுவதும் இருந்து வழிப்பறியில் ஈடுபட்டு தற்பொழுது பிணையில் உள்ள கைதிகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பொழுது, மதுரையைச் சார்ந்த சதீஷ் மற்றும் காக்கா முட்டை என்று அழைக்கக்கூடிய அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் மீது சந்தேகம் ஏற்படவே, இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். திண்டுக்கல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்காக ஆஜராவதற்கு இருவரும் வருவார்கள் என்று ரகசிய தகவல் கிடைத்ததன் பெயரில், குமாரபாளையம் போலீசார் திண்டுக்கல் நீதிமன்றம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே நின்று காத்திருந்தனர். அப்பொழுது இருவரும் பேருந்திலிருந்து இறங்கியதும் அடையாளம் தெரிந்து கொண்ட போலீசார், அவர்களை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், குமாரபாளையத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதினை ஒப்புக்கொண்டனர். அதனை அடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது அவர்கள் திண்டுக்கல்லில் பல இடங்களில் வழிப்பறி செய்த நகைகளை விற்பதற்காக திருப்பூர் வரும்பொழுது, சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் செயினை பறித்துக் கொண்டு, வரும் வழியில் குமாரபாளையம் பகுதியில் உள்ள கிழக்கு காந்திபுரம் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த சுமதியிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றதையும், மேலும் ராசிபுரம் பகுதியில் ஒரு மூதாட்டி இடம் தங்கச் செயினை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து ஒரே நாளில் 3 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளையும் மேலும் வழிப்பறி செய்வதற்காக பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து இருவரையும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.