சாலையில் சென்ற லாரி மீது மரம் விழுந்ததில் இருவர் பலி

குசினிபாளையம் அருகே சாலையில் சென்ற லாரி மீது மரம் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

Update: 2024-06-27 06:09 GMT

குசினிபாளையம் அருகே சாலையில் சென்ற லாரி மீது மரம் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன், 45, டிரைவர். அப்பகுதியை சேர்ந்த நாராயணப்பா, 41, என்பவரது செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரியை ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், 32, அதில் கிளீனராக இருந்தார். இருவரும் நேற்று ஓசூர் பகுதியில் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்து, அதன் கழிவுகளை இடையநல்லுார் அருகே உள்ள பகுதியில் வெளியேற்றி விட்டு, மீண்டும் ஓசூர் திரும்பி கொண்டிருந்தனர்.

மத்திகிரி - இடையநல்லுார் சாலையிலுள்ள குசினிபாளையம் அருகே நேற்று மதியம், 1:20 மணிக்கு சென்றபோது, சாலையோரமாக இருந்த மிக பழமையான ஆலமரம், திடீரென லாரி மீது சாய்ந்தது. இதில், டிரைவர் மாரப்பன், கிளீனர் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மத்திகிரி போலீசார் மற்றும் ஓசூர் தீயணைப்புத்துறையினர், 2 மணி நேர போராட்டத்திற்கு பின், இடிபாடுகளில் சிக்கிய இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

லாரி மீது சாய்ந்த மரம் மிக மோசமான நிலையில் இருந்ததால், அதை அகற்ற கடந்தாண்டு அக்., 10 மற்றும் கடந்த, 24ல், ஓசூர் சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குசினிபாளையம் பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.ஆனால், அதிகாரிகள் மரத்தை அகற்றாமல் அலட்சியமாக இருந்ததால், மரம் சாய்ந்து, இருவர் உயிர் இழந்துள்ளனர்.

Tags:    

Similar News