இணையவழிக்கல்வி வானொலியில் ஆடியோக்களை பதிவேற்றி சாதனை
சேலம் அருகே இணையவழிக்கல்வி வானொலியில் ஆடியோக்களை பதிவேற்றி சாதனை செய்த அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
இணைய வழிக்கல்வி வானொலியில் சேலம் மாவட்டம் ரெட்டிமணியக்காரனூர் அரசு நடுநிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி புவஸ்ரீ 8,400 ஆடியோக்களும், அதே வகுப்பு மாணவி தன்ஷிகா 7,800 ஆடியோக்களும், 4-ம் வகுப்பு மாணவன் நித்திஷ் வேணுகோபால் 2,700 ஆடியோக்களும் பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா வழிகாட்டுதலின்படி பதிவேற்றம் செய்து சாதனை படைத்தனர்.
இந்த சாதனை மாணவ, மாணவிகள் நேற்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களை கல்வி அமைச்சர் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், உதவி திட்ட அலுவலர் மாரியப்பன், வீரபாண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெண்ணிலா சேகர், இளம்பிள்ளை பேரூராட்சி தலைவர் நந்தினி, வார்டு கவுன்சிலர் துரை, இணையவழி கல்வி வானொலி சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், பள்ளி ஆசிரியையுமான முத்துமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.