சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
தாமரைப்பாக்கம் - திருநின்றவூர் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநின்றவூர் பெரியபாளையம் நெடுஞ்சாலை, தாமரைபாக்கம் கூட்டுச்சாலை வரை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்கத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கின்றனர். ஆவடி செல்லக்கூடிய இச்சாலையில் தினமும் ஆயிரக் கணக்கான இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள், சரக்கு வாகனங்கள் செல்கின்றன.
மேலும் பொது மக்கள் அதிகம் பயணம் செய்யும் ஆட்டோக் கள் இந்த வழித்தடத்தில் இயங்கி வருகிறது. இப்போது ஆட்டோக்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலையில் கற்கள் பரவியுள்ளது. சாலையில் எங்கு பள்ளம், எங்கு மேடு உள்ளது என்று தெரியாததால் விபத்துக்கள் ஏற்படுகிறது. பாலம் கட்டும் இடங்களில் சாலை முழுவதும் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்கள் ஜல்லி மீது ஏறி இறங்கும் போது தவறி விழுந்து தினமும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையி லிருந்து திருநின்றவூர் வரை. 12 கிலோமீட்டர் தூரத்தில் எந்த இடத்திலும் அறிவிப்பு பலகைகள் ஏதும் இல்லை. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் விருப்பம் போல் வேலை செய்து வருகிறார்கள்.
ஆவடிக்கு செல்லும் மிக முக்கியமான சாலை என்பதால், தினமும் பயணம் செய்யும் பொது மக்களின் சிரமங்களை பற்றி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எளிய மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பணிகள் நடைபெறும் இடங்களில் தூசு பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கண்களில் தூசி படிந்து விபத்துக்கள் நிகழ்கிறது. எனவே தூசிகள் பறப்பதை தடுக்க சாலையில் தண்ணீரரை தெளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தூசியால் மகசூல் பாதிப்பு வீடுகள், கடைகளில் தூசிகள் நிரம்புவதால் இயல்பு வாழ்க்கை பாதிப் பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் தூசி மண்டலமாக மாறியுள்ளதால் மக்கள் சுவாசிக்க முடியாமல் திணறு கின்றனர். சாலையோரங்களில் 1 கி.மீ. பரப்பளவில் தூசிகள் படிவதால் விவசாய நிலத்தில் பயிர் செய்து இருக்கும் பூ செடிகள், நெல் பயிர்கள் ஆகியவற்றில் மண் படிந்து பனியில் நனைந்து குருத்துக்கள் அழுகுவதால் மகசூல் பாதிக்கிறது. இப்படி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கும் இச்சாலை இப்பணியை காலம் தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.