சிவகிரியில் அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில் வைகாசி மாத பூக்குழி திருவிழா
சிவகிரியில் அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில் வைகாசி மாத பூக்குழி திருவிழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரியில் திரவுபதி அம்மன் கோவில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பூக்குழி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை முன்னிட்டு காலை 7.15 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் 18 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொடிப்பட்டம் வீதிஉலா சென்று, 8 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இது தொடர்ந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் கிருஷ்ணன், அர்ஜூனன், திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, வீதிஉலா ஆகியவை நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 24 -ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை விழாவில் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதில் விரதமிருந்த திரளான பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். தொடர்ந்து 25 -ந்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அலுவலர்கள் தக்கர் கண்ணதாசன் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு கேசவ ராஜன், காப்புக்கட்டி சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.